உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்து கருத்தரங்கம்

X
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் உள்நாட்டு மீன் வள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தன்னிறைவு அடையும் வகையில் மீன் உற்பத்தியினை பெருக்கிட வேண்டும், அதற்கு மீன் வளர்ப்போர்கள் மீன் வளத்துறையின் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும், என்றார். அதனைத்தொடர்ந்து, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி முன்னிலை வகித்து, மாவட்டத்தில் மீன் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களான பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டம்(PMMSY), மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி(FIDF), தற்போது மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அலைகள் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் மீனவ மகளிருக்கு ரூ.5ஆயிரம் நுண் கடன் வழங்குதல் மற்றும் மீன் உற்பத்தியாளர்சங்கங்கள்(FFPO) ஆகிய திட்டங்கள் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஸ்டாலின் பங்கேற்று, இதுவரை உவர் நீர் குளங்களில் மட்டுமே கொடுவா மீன் வளர்ப்பு செய்து வந்த நிலையில் தற்போது நன்னீர் குளங்களிலும் கொடுவா மீன் வளர்ப்பு குறித்தும், மீன் வள ஆய்வாளரான ரெஜினா ஜாஸ்மின் பங்கேற்று, பயோ பிளாக் முறையில் மீன் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். மேலும், மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு புரதச்சத்து மிகுந்த மீன் உணவு சாப்பிடுவதினால் மன அழுத்தம், மாரடைப்பு, ஆஸ்துமா, முன் கழுத்து கழலை போன்ற நோய்கள் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கப்படுகிறது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முன்னோடி மீன் வளர்போருக்கு விருதுஈரோடு மாவட்டத்தில் புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்தல் திட்டத்திற்காக ஈஸ்வரமூர்த்தி என்ற பயனாளிக்கும், ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பிற்காக கோவையை சேர்ந்த தினேஷ் என்ற பயனாளிக்கும், பயோ பிளாக் முறையில் மீன் வளர்ப்பினை மேற்கொண்ட திருப்பூரை சேர்ந்த செங்கோடன் என்ற பயனாளிக்கும் முன்னோடி மீன் வளர்ப்போருக்கான விருதுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் வழங்கினார்.இந்த கருத்தரங்கில் முன்னதாக மீன் வள ஆய்வாளர் கலைவாணி வரவேற்றார். நிறைவில் மீன் வள ஆய்வாளர் பத்மஜா நன்றி கூறினார். இதில், மீன் விவசாயிகள் மற்றும் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

