சிறுத்தை புலி பிடிக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

சிறுத்தை புலி பிடிக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு
X
சென்னிமலை அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னிமலை அருகே தெற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறுத்தைப்புலி புகுந்து கால்நடைகள் மற்றும் நாய்களை கடித்து கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இங்கு பதிந்துள்ள கால் தடயங்களை பார்த்தபோது அது சிறுத்தைப்புலி தான் என வனத்துறை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் சிறுத்தைப்புலியை உயிருடன் பிடிக்க சில்லாங்காட்டுவலசு வனப்பகுதியை ஒட்டியுள்ள குமாரசாமி என்பவரின் தோட்டத்தில் கடந்த மாதம் கூண்டு வைக்கப்பட்டு அதில் ஆடு ஒன்று கட்டப்பட்டு வந்தது. ஆனால் அந்த கூண்டுக்கு சிறுத்தைப்புலி டிமிக்கி கொடுத்து விட்டு அருகில் உள்ள அப்புக்குட்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்து இதுவரை ஒரு ஆடு மற்றும் ஒரு நாயை கடித்து கொன்றுள்ளது. இதுவரை வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் புகுந்து கால்நடைகள் மற்றும் நாயை கொன்ற சிறுத்தைப்புலி கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியை தாண்டி வந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள செல்லக்குட்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்து ஒரு நாயை கடித்து கொன்று தின்றுவிட்டு பாதி உடலை அங்கேயே போட்டு சென்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில், சென்னிமலை வனக்காவலர் துரைசாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் நேற்று சென்னிமலை வனப்பகுதியை டிரோன் மூலம் கண்காணித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மாவட்ட வன அதிகாரியின் உத்தரவுப்படி சிறுத்தைப்புலியை உயிருடன் பிடிக்க இரவு, பகலாக கண்காணித்து வருகிறோம். இதற்காக கூண்டும் வைத்துள்ளோம். இனி கூடுதலாக கூண்டு வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர். வனப்பகுதியில் சுற்றி வந்த சிறுத்தைப்புலி தற்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்ததால் மனிதர்களை கடிப்பதற்கு முன்பு சிறுத்தைப்புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story