அரக்கோணம் அருகே கார் இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் பலி

X
அரக்கோணத்தை அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 35). இவர் சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி கார்த்திக் (28) டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று மாலை இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் அருகே சாலை கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எஸ்.ஆர்.கண்டிகை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது எதிரே அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் அரக்கோணம் சோளிங்கர் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட குற்றப்பிரிவு துணை எஸ்பி ராமச் சந்திரன், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீண்ட நேரமாக போலீசார் பேசியும் சமாதானம் ஏற்காமல் அங்கு மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 2 மணி நேரமாக நடந்த மறியலை தொடர்ந்து இறந்த இருவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக் காக அரக்கோணம் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அந்த பகுதியில் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

