புன்னக்காயல் புனித தோமையார் ஆலய திருவிழா சப்பர பவனி!

X
புன்னக்காயல் புனித தோமையார் ஆலய திருவிழாவில் நடைபெற்ற சப்பர பவனியில் திரளான படகுகளில் கிறிஸ்தவர்கள் சென்று வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள மீனவ கிராமமான புன்னக்காயலி்ல் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு பிரிவுகளாக பிரிந்து கடலில் கலக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருப்பது சிறப்பாகும். இந்த ஆலயதிருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புன்னக்காயல் பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ் அடிகளார் கொடியேற்றி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதிலும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து விழா நாட்களில் மாலையில் ஆராதனை, திருப்பலி, மறையுறை ஆகியவை நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஆலய வளாகத்திலேயே தங்கியிருந்து வழிபாடு நடத்தி வந்தனர். முக்கிய நிகழ்வான 10-ம் திருவிழாவான நேற்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு புன்னக்காயல் மீன்பிடிதுறைமுக முகத்துவார வழியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் படகில் புறப்பட்டு சென்றனர். கடலில் தூண்டில் வளைவு பாலத்தை கடந்து ஆலயத்திருவிழாவில் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி புனித தோமையார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தமியான் அடிகளார், ஆலய துணை பங்குத் தந்தை ஜெரால்டு அடிகளார் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து புனித தோமையாரின் சொரூபம் தாங்கிய சப்பர பவனி ஆலயம் முன்பிருந்து தொடங்கியது. ஆலயத்தை சுற்றி வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Next Story

