ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றிய பொது நிதி 2024- 2025ல், மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரிபட்டி கருப்பு கோவில் ஆர்ச் அருகில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறு தரை பாலம் பொது மக்களுக்கு ஆபத்தான முறையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : இந்த வழியாக தினசரி கருப்பு கோவிலுக்கு மக்கள் அதிக அளவில் வாகனங்களில் செல்வது வழக்கம். அவர்கள் சற்று கவனக் குறைவாக சென்றாலும், அவ்விடத்தில் கீழே விழுந்து விபத்து ஏற்படும்படி அந்த பாலம் வளைவில் குறுகலாக தரையோடு தரையாக எந்தவித பாதுகாப்பு மற்றும் தடுப்பு சுவர் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இது குறித்து பாலம் கட்டிய காண்ட்ராக்ட்காரரிடம் நாங்கள் முறையிட்டோம். அதற்கு அவர் ஊராட்சி செயலாளரில் இருந்து பிடிஓ வரை கமிஷன் கொடுத்து தான் கட்டுகிறேன். மீதம் உள்ள பணத்தில் அவ்வளவு தான் கட்ட முடியும். இதனை சரியா கட்டணும்னா நீங்க பணம் கொடுங்க நல்லா கட்டி தருகிறேன் என கூறி உள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உயரதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கூறினர்.
Next Story




