அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுன் ஸ்டாலின் திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுன் ஸ்டாலின் திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம்
X
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுன் ஸ்டாலின் திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்,ஜூலை 15- அரியலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்,பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பெறலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இம்முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரியலூர் ஆட்சியர் அலுவலககக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 முதல் அக்டோபர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெறவுள்ளது. நகராட்சி பகுதிகளில் 5 வார்டுகளுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையிலும், ஊரக பகுதிகளில் 10,000 பொதுமக்கள் வசிக்கும் பகுதி அல்லது 4 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 1 முகாம் என்ற அடிப்படையில் 95 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடைபெறவுள்ளது. இம்முகாமானது அரியலூர் மாவட்டத்தில், ஜூலை 15}இல் தொடங்கி ஆக.14 முடிய 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த ஆக. 15 ஆம் தேதி முதல் செப்.14 ஆம் தேதி வரையில் 36 முகாம்களும், செப்.15}இல் தொடங்கி அக்.14 ஆம் தேதி வரை 23 முகாம்களும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதால், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தேவைப்படும் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம். மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரிவில் வழங்கப்படும் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றார். தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவிருக்கும் அரியலூர் நகராட்சி அலுவலகத்துக்கு, நேரில் சென்று முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story