மூடப்படும் நிலையில் உள்ள அரசு பள்ளி

மூடப்படும் நிலையில் உள்ள அரசு பள்ளி
X
இளையான்குடி அருகே மூடப்படும் நிலையில் உள்ள அரசு பள்ளி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவ்வூரில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் திரைப்பட நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயர்நீதிமன்ற நீதிபதி, மற்றும் அரசின் பல்வேறு உயர்பதவிகளில் உள்ள முக்கியமானோர் கல்வி பயின்றிருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் ஒரு கட்டத்தில் மூடப்பட்ட இந்த பள்ளி, அரணையூர் மக்களின் ஆற்றல்மிக்க முயற்சியால் 2022-ஆம் ஆண்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதன் பின்விளைவாக ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடம் மற்றும் ரூ.7.45 லட்சம் மதிப்பீட்டில் சத்துணவுக் குழாய் சமையலறை கட்டப்பட்டது. தற்போது 19 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பொறுப்பாளர் நியமனம் நடைபெறவில்லை. இந்நிலையில் அருகிலுள்ள வடக்கு கீரானூர் மற்றும் ஒச்சம்தட்டு பள்ளிகளில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள், கூடுதல் பொறுப்பில் இப்பள்ளிக்கு வந்து பாடம் நடத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி வருவதால், பள்ளி மீண்டும் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கவலை கொண்டுள்ள கிராம மக்கள், இப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story