ஊதியக்குழுவின் பரிந்துரையிலிருந்து ஓய்வூதியரை நீக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் இன்று மாலை நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன் மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமையில், அகில இந்திய கோரிக்கை நாள் தர்ணா நடைபெற்றது. நாகை வட்டச் செயலாளர் ஆர்.மாரிமுத்து வரவேற்றார். ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சு.சிவகுமார் விளக்கவுரையாற்றினார். தர்ணாவில். ஊதியக்குழுவின் பரிந்துரையிலிருந்து ஓய்வூதியரை நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் நல சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தொடர்வண்டி மற்றும் வானூர்திகளில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எம்.பி.குணசேகரன் நன்றி கூறினார்.
Next Story



