ராமநாதபுரம் கோலாலமாக நடைபெற்ற புனித சந்தியா யாகப்பர் ஆலய கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 483ஆம் ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு மீனவ மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயம் தங்கச்சிமடத்தில் அமைந்துள்ளது. இங்கு மத, சாதி, சமுதாய வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும் வழிபடுவது வழக்கம். இன்று மாலை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 483 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். பங்குத் தந்தை ஆரோக்கிய ராஜா சிறப்பு திருப்பலி பூஜைகளை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. விழா குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், தங்கச்சிமடம் ஜமாத் தலைவர், சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ என அனைத்து சமுதாய பக்தர்கள் நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். ஜுலை 24ந்தேதி வியாழக்கிழமை அன்று புனித சந்தியாகப்பர் திருவிழா திருபலியும், தேர் பவனியும் நடைபெறும் என பங்குத் தந்தை ஆரோக்கிய ராஜா தெரிவித்தார்.
Next Story



