கன்னியாகுமரி கடலில் பலத்த காற்று

X
கன்னியாகுமரியில் உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தங்களது வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே நேற்று கன்னியாகுமரி கடலில் காற்றின் வேகம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் சூறாவளி காற்றாக மாறியது. இதனால் மீனவர்களின் நலன் கருதி மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கன்னியாகுமரி கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. ஆகவே மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் பாதுகாப்பாக விசைப்படகுளை நிறுத்தி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 17-ம் தேதி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக சின்ன முட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் வலைகளை பராமரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.
Next Story

