குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள் தஞ்சையில் பரபரப்பு

X
தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச் சங்கம் உறுப்பினர்கள், பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை சரி செய்யக்கோரி, பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வியாழக்கிழமை சென்றனர். பின்னர் ஊராட்சி செயலாளர் ரமேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு சிந்தாமணி பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். பம்ப் எண்.4, 5 ஆகிய பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும். 6-ஆம் எண் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் செயலற்ற ஆழ்குழாய் கிணற்றை பழுது நீக்கி செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். 7-ஆம் எண் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து ஏற்கனவே குடிநீர் வழங்கியது போல் காலையில் ஒரு பகுதிக்கும், மாலையில் விடுபட்ட மற்றொரு பகுதிக்குமாக இருவேளை குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளாகத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பைகளில் விஷப்பாம்புகள் வசித்துக் கொண்டிருப்பதால், இப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட வேண்டும். தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்களை அப்புறப்படுத்திட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி செயலாளர் உறுதி அளித்தார். காலிக் குடங்களுடன் சென்று மனு அளிக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Next Story

