பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
X
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வதை தடுக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, மணல்மேடு, மாகரல் வழியே தினமும் காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து, மலையாங்குளம், சிலாம்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளை பயன்படுத்தி தினமும், 1,000க்கும் மேற்பட்ட பயணியர் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து மலையாங்குளத்திற்கு தடம் எண்34டி பேருந்து தினமும் நான்கு முறை இயக்கப்படுகிறது. இப்பேருந்து, மலையாங்குளத்தில் இருந்து, காலை நேரத்தில் காஞ்சிபுரத்திற்கு செல்லும்போது, மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும்போது, தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வதை தடுக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
Next Story