வேளாங்கண்ணியில் அரசு விளம்பரங்களை மறைத்து அதிமுக விளம்பரம்

திமுகவினர் புகார் - பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அதிமுகவினர் விளம்பரங்கள் அகற்றம்
நாகை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தரும் அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். நேற்று மாலை கீழ்வேளூர் வந்த அவர் பொதுக் கூட்டத்தை முடித்து கொண்டு, வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார். வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் அரசின் விளம்பரங்களை மறைத்து, அதிமுகவினர் பதாகைகளை வைத்துள்ளனர். இதனால், திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, வேளாங்கண்ணி காவல் நிலையம் முன்பு திமுக மற்றும் அதிமுகவினர் திரண்டனர். அதிமுகவினர் ஒட்டி உள்ள விளம்பரங்களை அகற்றும்படி திமுகவினர் புகார் அளித்ததின்பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிந்தனர். வேளாங்கண்ணி பேரூராட்சி சுகாதார அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குளக்கரை சுற்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக பேனர்களை அகற்றினர். ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுவதுமாக அகற்றப்பட்டன. மேலும், அந்த சுவற்றில் வேறு எந்த விளம்பர பதாகையும் ஒட்டக்கூடாது என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேளாங்கண்ணி பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
Next Story