பேராவூரணியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று வீடு, வீடாகச் சென்று, தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, பொதுமக்கள் சுய விருப்பத்துடன், திமுக உறுப்பினர்களாக இணைத்து வைத்தனர். பேராவூரணி தெற்கு ஒன்றியம் காலகம், பேராவூரணி நகர் நாட்டாணிக்கோட்டை, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், "தமிழ்நாடு அரசு மக்களின் நலம் பேணும் அரசாக செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசுத் துறையை தேடி பொதுமக்கள் செல்லும் நிலையை மாற்றி, பொதுமக்களை தேடி வந்து அரசின் சேவைகளை வழங்கும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் முகம் நடத்தப்பட்டு, அரசின் 15 துறைகள் மூலம் 46 விதமான சேவைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பம் இருக்கும் என்றால் நீங்கள் திமுகவில் உறுப்பினராக இணையலாம்" என்று பேசினார். நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொறுப்பாளர் தி.பழனிவேல், பேராவூரணி தொகுதி பார்வையாளர் சுப. சரவணன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பழஞ்சூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி. முத்துமாணிக்கம், நகரச் கழகச் செயலாளர் என்.எஸ். சேகர், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக அனைத்து நிலை நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
Next Story

