ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலைய வணிக கடைகளை இடிக்க வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்...*

X
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலைய வணிக கடைகளை இடிக்க வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்து உள்ளதால், அதை இடித்து விட்டு, 36 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பேருந்து நிலையத்தில் கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், வியாபாரிகள் மறுப்பு தெரிவித்ததால், பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து வியாபாரிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற அமர்வு, உரிய மாற்று ஏற்பாடு செய்த பின் கடைகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வியாபாரிகள் சிலர் கடைகளை காலி செய்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த இலவச கழிப்பறை கடந்த வாரம் அகற்றப்பட்ட நிலையில், பேருந்து நிலைய கடைகளை இடிக்க வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காலி செய்யப்பட்ட கடைகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் பல கடைகள் இயங்கி வரும் நிலையில், வணிக வளாகத்தை இடிக்கும் பணி தொடர்ந்து வருகிறது. குறுகலான பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலையில், பாதுகாப்புக்கு தடுப்புகள் ஏதும் அமைக்காமல் ஆபத்தான முறையில் கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கடைகளையும் காலி செய்த பின்னரே வணிக வளாகத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கோ, பயணிகள் காத்திருப்பதற்கோ எவ்வித மாற்று ஏற்பாடும் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை. சிவகாசி சாலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது திறந்த பின் பேருந்து நிலையத்தை இடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

