தாடிக்கொம்பு பேரூராட்சி மறவப்பட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்“ நிகழ்வு

X
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சி, மறவப்பட்டியில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், பட்டா, வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என அனைத்துத் திட்டங்கள் தொடர்பாக இந்த முகாம்களில் மனுக்கள் அளிக்கலாம். தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) இராஜா, தாடிக்கொம்பு பேரூராட்சித் தலைவர் கவிதாசின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், செயல் அலுவலர் பானு ஜெயராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

