ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களை மட்டுமே சிந்தித்து

அதிகாரம் வழங்கி வருகிறார் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாடல்
நாகை மாவட்டத்தில், 2-வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாகை அவுரித்திடலில் நேற்று பேசியதாவது மக்கள் விரும்பிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டது. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக மக்கள் அமர வைத்தனர். ஆனால் அவர் மக்களைப் பற்றி சிந்திக்காமல், வீட்டு மக்களை மட்டுமே சிந்தித்து அதிகாரம் வழங்கி வருகிறார். நாகை மாவட்டத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் வந்தார் தெரியுமா? தெரியாது. ஏனெனில், நாகை மாவட்டத்திற்கு முதல்வர் எதையும் செய்யவில்லை. எதாவது செய்து இருந்தால் தானே முதல்வர் வந்தது தெரியும். அதிமுக ஆட்சி காலத்தில் நாகை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் நான் நெஞ்சை நிமிர்த்து கொண்டு பேசுகிறேன். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி, மருமகன், மகன் என நான்கு அதிகாரம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நான்கு அதிகார மையங்களும் 50 மாத காலமாக, தமிழகத்தை ஆட்டி வைக்கின்றனர். 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் இதற்கு முடிவு கட்டும். அதிமுக ஆட்சி காலத்தில் அதிகாரிகள் சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மக்களுக்கு அனைத்து திட்டங்களும் உடனுக்குடன் கிடைத்தன. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களால் காவேரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் நிலை ஏற்பட்ட போது, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு மண்டலமாக சட்ட வழியில் அறிவித்தது அதிமுக அரசு சாதனையாகும். ஒவ்வொரு ஆண்டும் பருவம் தவறி மழை பெய்யும் போது விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோதாவரி, காவிரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற, அதிமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் தற்போது இத்திட்டம் கிடப்பில் உள்ளது. காவிரி நீரை நம்பி 20 மாவட்டங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் சுத்தமான குடிநீர், விவசாயத்திற்கு சுத்தமான நீர், கடைமடை வரை எளிதாக தண்ணீர் கிடைக்க, நடவடிக்கை எடுக்கும் வகையில் காவிரி நடை வழி திட்டம் தீட்டப்பட்டது. இது தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இடம் தெரிவித்து குடியரசு தலைவர் உரையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இத்திட்டம் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் இது குறித்து கேட்ட போது கிண்டலும் கேலியும் செய்யப்பட்டது. தற்போது, ஒன்றிய அரசு திட்டத்திற்கு ரூ.11,500 கோடி நிதி ஒப்புதல் அளித்து, முதற்கட்டமாக ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைமடை வரை சுத்தமான நீர் கிடைக்க இத்திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசுதான். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை செல்வதற்கு 25 சதவீதம் வீணாகிறது. இதை தடுக்கும் வகையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கால்வாய்கள் கான்கிரீட் அமைக்க, அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது கடைமடையில் தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புவதை கேட்க முடிகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் கடைமடை வரை எளிதாக தண்ணீர் கிடைத்திருக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டுப்பாடு இன்றி உரங்கள் விவசாயத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்தியாவிலேயே அதிக பயிர் காப்பீடு ரூ.12 ஆயிரம் கோடி வழங்கியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட விலையில்லா மாடு, ஆடு, கோழி வழங்கும் திட்டங்கள், திருமண உதவித் தொகை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியின் போது கொரோனா பாதிப்பால் எந்த வருமானமும் அரசுக்கு இல்லை. அப்போது கூட விலைவாசி உயர்வை கட்டுக்குள் அரசு வைத்திருந்தது. ஆனால், திமுக அரசுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லாத நிலையில் கூட, அவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. பொதுமக்களை கடுமையாக பாதித்து வருகிறது. தமிழகத்தில் திறனற்ற முதல்வராக, பொம்மை முதல்வராக ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story