பொதுமக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மீன் பிடி திருவிழா

பொதுமக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மீன் பிடி திருவிழா
X
நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மீன் பிடி திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கருத்தலக்கம்பட்டியில் 20 ஏக்கர் பரப்பளவில் சத்திர கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களையும் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கட்டணம் ஏதுமின்றி பிடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சமத்துவ மீன் பிடித்திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கோட்டையூர், கரையூர், சக்கபிச்சம்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்களும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் ஒரே நேரத்தில் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி கச்சா, வலை, கூடை மற்றும் ஊத்தா மீன் பிடி கூடைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட், உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. இந்த மீன் பிடி திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து தூக்குவாளி, சட்டி, சாக்கு பைகளிலும் மீன்களை நிரப்பி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
Next Story