நுண்ணீர் பாசன மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நுண்ணீர் பாசன மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
X
அழைப்பு
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள், வேளாண் பயிர்களுக்கு, பிரதமர் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் மானியம் பெற்று பயனடையலாம் என வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 2,700 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.6 கோடி மானியம், வழங்கப்பட்டு வருகிறது.  இதில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 718 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவு வரையுள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும்.  பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும், சொட்டு நீர் பாசனத்தின் முக்கியமான சிறப்பம்சம் பாசன நீர் சேமிப்பு ஆகும்.  மற்ற பாசன முறைகளைக் காட்டிலும் சொட்டு நீர் பாசனத்தில் அதிக அளவில் நீர் சேமிக்கப்படுகிறது.  பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில் 30 முதல் 40 விழுக்காடு மட்டுமே பாசனம் பெறுவதன் மூலமும், வாய்க்கால் வழிநீர் விரயம் முற்றிலும் தவிர்க்கப்படுவதன் மூலம் நுண்ணீர் பாசன நீர் 50 முதல் 60 விழுக்காடு வரை சேமிக்கப்படுகின்றது. மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நீர் பயன்பாட்டு திறன் அதிகரித்து அதிக விளைச்சல் அளிப்பதற்கும் உர பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படவும்,  களை வளர்ச்சி மற்றும் பூச்சி, பூஞ்சாண தாக்குதல் குறைவாக உள்ளதென அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட சொட்டுநீர் பாசனத்தின் பயன்களை அறிந்து, தங்கள் விளை நிலங்களில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு சொட்டுநீர் பாசனம் அமைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது" என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Next Story