அம்மன் வேடங்களில் வந்த பெண் பக்தர்கள்

குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் திருவிழாவையொட்டி அம்மன் வேடங்களில் பெண் பக்தர்கள் வந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் திருவிழா குமாரபாளையத்தில் திருநங்கை மாதம்மாள் தலைமையில் 17ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடந்தது. ஜூலை. 18ல் கணபதி ஹோமம், நவதானிய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு காவிரி ஆற்றிலிருந்து கங்கை திரட்டி, பச்சை கரகம், பூங்கரகம் எடுத்து அம்மன் அழைப்பு வைபவம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்துடன் சமயபுரம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் அருள்பாலித்தவாறு வந்தார். இதில் பெண் பக்தர்கள் பத்ரகாளி, சமயபுரம் மாரியம்மன், உள்ளிட்ட பல அம்மன் வேடங்களில் வந்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வந்த அம்மன் அழைப்பு வைபவத்தை, பக்தர்கள் வழி நெடுக காத்திருந்து, பாதை முழுதும் தண்ணீர் ஊற்றியும், தேங்காய், பழங்கள் கொடுத்து பூஜை செய்தும் வழிபட்டனர். நேற்று மேற்கு காலனி பகுதியில் சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், சப்தகன்னி பூஜை, சுமங்கலி பூஜை, புஷ்பாஞ்சலி ஆகியன நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story