நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், இந்திய தொழிற்சங்க மையத்தின் நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவர் ஏ.சிவனருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சு.சிவகுமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். வேலை மற்றும் வரவு செலவு அறிக்கையை மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி சமர்ப்பித்தார். பிரதிநிதிகள் விவாதத்திற்கு பின்னர் அறிக்கைகள் ஏற்கப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எஸ்.பழனியம்மாள், மாவட்ட துணைத் தலைவர்கள் பி.ஜீவா, எஸ்.ஆர்.ராஜேந்திரன், டி.அருள்ராஜ் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட தலைவராக ஏ.சிவனருட்செல்வன், மாவட்ட துணைத் தலைவர்களாக கே.தங்கமணி, பி.ஜீவா, சு.சிவகுமார், எஸ்.வி.செல்வகுமார், ஏ.எஸ்.பழனியம்மாள், மணிமேகலை ஆகியோரும், மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்களாக கே.அன்பழகன், பி.தமிழரசன், டி.அருண்ராஜ், பி.ஜெயராமன், ஆர்.ரவி, கே.விஜயலெட்சுமி, மாவட்டப் பொருளாளராக என்.வெற்றிவேல் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். ஊட்டச்சத்து திட்டத்தில், பணிபுரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவித்து, பணியாளர்களுக்கு ரூ.இருபத்தி ஆறாயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மாம்பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் வைக்கோலைக்கொண்டு பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தினக்கூலியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர் கே.விஜயன் நிறைவுரையாற்றினார். புதிய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன் நன்றி கூறினார்.
Next Story



