அங்கம்பாக்கம் அரசு பள்ளியில் வாரத்தில் ஒருநாள் முருங்கை இலை 'சூப்'

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது அங்கம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 116 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு வாரந்தோறும் முருங்கை இலை சூப் வழங்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்பள்ளியில் அறிவியில் ஆசிரியராக பணியாற்றும் சேகர் என்பவர் தன் சொந்த செலவில் செயல்படுத்தி வருகிறார். இதுகுறித்து ஆசிரியர் சேகர் கூறியதாவது: இப்பள்ளியில் அவளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கடந்த ஜனவரியில் மாணவர்களுக்கான உடல் பரிசோதனை நடைபெற்றது. அதில், ஒரு சில மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாக அறியப்பட்டது. வைட்டமின் மற்றும் தாது சத்து நிறைந்துள்ள முருங்கை இலை சூப்பை குழந்தைகள் அருந்தினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சீரான ரத்த ஓட்டத்திற்கும் பயனாக இருக்கும் என, தோன்றியது. கிராமபுற பெற்றோர்களுக்கு பல்வேறு பணிகள் காரணமாக இத்தகைய சூப் தயாரித்து தர நேரம் இல்லாததால், பள்ளியில் வாரத்தில் ஒரு நாள் அனைத்து மாணவர்களுக்கும் முருங்கை இலை சூப் வழங்க தீர்மானித்தேன். இதற்காக தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெற்று முருங்கை இலை சூப் வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்பள்ளி மாணவர்களுக்கு முருங்கை இலை சூப் வழங்கியபோது, ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

