தாழ்த்தப்பட்டவர்களை புறக்கணித்தால் அரை நிர்வாண போராட்டம் நடைபெறும்.
தாழ்த்தப்பட்டவர்களை புறக்கணித்தால் அரை நிர்வாண போராட்டம் நடைபெறும். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் TVR என்ற தனியார் திருமண மண்டபம் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில் சுப காரியங்கள் நிகழ்த்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பாக பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த சக்திவேல, 21 ஆம் நூற்றாண்டாக உள்ள இந்த நவீன காலத்திலும் ஜாதி பேதம் பார்ப்பது வெட்கக்கேடான விஷயமாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் இல்லங்களில் நடைபெறும் சுப காரியங்களுக்கு மண்டபம் தர மறுப்பது ஏற்க முடியாது. இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளதை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்ததாகவும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கரூர் மாநகரப் பகுதியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
Next Story






