ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மீது பொய் வழக்கு குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் மனு

ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மீது பொய் வழக்கு குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் மனு
X
கல்லூரி மாணவர்கள் மீது கஞ்சா வைத்திருந்ததாக நான்கு இளைஞர்களை கேணிக்கரை போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு
ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் குமராண்டி வலசை கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் மீது பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள இளைஞர்களின் குடும்பத்தினர் உடனடியாக இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இளைஞர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கேணிக்கரை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அடுத்த குமராண்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன், சிவகணேஷ், கண்ணன், அகிலன் ஆகிய நான்கு இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்களது சொந்த ஊரில் உள்ள பொது இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கேணிக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்த போலீசாரிடம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இளைஞர்களை அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய நால்வரையும் அழைத்துச் செல்வதாகவும்,விசாரித்துவிட்டு விரைவில் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளைஞர்கள் நால்வர் மீதும் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர். இளைஞர்கள் நான்கு பேர் மீதும் கேணிக்கரை போலீசார் திட்டமிட்டே பொய் வழக்கு பதிவு செய்து கல்லூரியில் படிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி உள்ளதாக குற்றம்சாட்டும் இளைஞர்களின் உறவினர்கள், இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கை குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உறவினர்கள் மனு அளித்தனர். மேலும் கேணிக்கரை காவல் நிலையத்தில் மனித உரிமை மீறும் செயலில் காவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், ஏந்தல், வாலாந்தரவை, குமராண்டி வலசை உள்ளிட்ட கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக மனு அளிக்க வந்திருந்த அப்பகுதியை சேர்ந்த சுஷ்மிதா - கைது செய்யப்பட்ட இளைஞரின் சகோதரி குற்றம் சாட்டினர்.
Next Story