பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

X
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறையும் வரை நீட், உதய் மின்திட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற மறுத்தார். ஆனால் பழனிசாமி நீட் தேர்வை 2017-ல் நடைமுறைக்கு கொண்டுவந்தார். 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, திமுக வைத்த கடன் ரூ.1 லட்சம் கோடி. ஆனால் 2021-ல் அதிமுக விட்டுச்சென்ற கடன் ரூ.5.7 லட்சம் கோடி. 11 ஆண்டுகளில் ரூ.130 லட்சம் கோடிக்கு பாஜக அரசு கடன் வைத்திருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையை பற்றி பேசும் பழனிசாமி, மத்திய பாஜக அரசின் கடன் சுமையை பற்றி பேச துணிவு இருக்கிறதா? சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு, மும்மொழி கொள்கை திணிப்பு, கல்வித்துறைக்கு நிதி மறுப்பு, மக்களவை எண்ணிக்கை குறைக்கும் முயற்சி போன்றவற்றை எதிர்க்காமல் அடிமை கட்சியாக அதிமுக உள்ளது. மீண்டும் பாஜக கூட்டணியில் சேரவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பதை பழனிசாமி விளக்கவில்லை. பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி அமலாக்கத் துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கும்வரை அமித் ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது. எனவே பழனிசாமி சுற்றுப்பயணங்களில் நீலிக்கண்ணீர் வடிப்பதை எவரும் ஏற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
Next Story

