ராணிப்பேட்டையில் சரக்கு வாகனங்கள் மோதி விபத்து!

X
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் எரிவாயு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சென்னையில் உள்ள தொழிற்சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள சரக்கு வேனில் சென்றனர். ராணிப்பேட்டை மகாவீர் நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது பாய்ந்து எதிர் திசையில் வேலூர் நோக்கி டயர்களை ஏற்றி வந்த மற்றொரு சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சரக்கு வேன் டிரைவரின் கால்கள் இடிபாடுகளில் சிக்கி முறிவு ஏற்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று அவரை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (57), திண்டிவனத்தை சேர்ந்த வீரக்குமார் (62), ஆம்பூரை சேர்ந்த பிரபாகரன் (27), கடலூரை சேர்ந்த குபேந்திரராஜா (35), ரஞ்சன்பட்டேல் (34), சென்னையை சேர்ந்த அரவிந்தகுமார் (38) ஆகிய 6 பேர் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

