தஞ்சாவூர், மாரிக்குளம் பம்பிங் ஸ்டேசன் பகுதியில் மேயர், ஆணையர் ஆய்வு... கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

X
தஞ்சாவூர் பூக்காரத் தெரு விளார் சாலை மாரிக்குளம் பம்பிங் ஸ்டேசன் பகுதியில் திங்கள்கிழமை காலை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் பம்பிங் ஸ்டேசனில் புதிதாக மோட்டார் அமைத்து குழாய் பொருத்தப்படும். இதன் மூலம் கழிவு நீர் வெளியேறும் பிரச்சனை நிரந்தரமாக சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பூக்கார தெரு, விளார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அன்பு நகரில் சேதமடைந்த பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டு புதியதாக பயணிகள் நிழற்குடை அமைத்து பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்படும். சிந்து நகர் பூங்காவிற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும். லாயம் கிழக்கு தெருவில் சேதமடைந்த பாலம் புதுப்பிக்கப்படும். சுப்பிரமணியசாமி கோவில் அருகே கடந்த பல ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு சமுதாய நலக்கூடமாக மாற்றப்படும். முஸ்லிம் தெருவில் புதிய பூங்கா, அய்யனார் கோவில் தெரு, கல்லுக்குளம் பகுதியில் புதிய சாலை அமைத்துக் கொடுக்கப்படும். சேதமடைந்த விளார் சாலை புதுப்பிக்கப்படும். கல்லுக்குளம், கான்வென்ட் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தரப்படும்" என்று மேயர், ஆணையர் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர்கள் கண்ணுக்கினியாள், வைஜெயந்தி மாலா, தமிழரசி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

