இருகூர் பேரூராட்சியில் சாக்கடை பணி தாமதம்: டெங்கு அபாயம், பொதுமக்கள் குமுறல்!
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சியில், சாக்கடை அமைக்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருப்பதால், கழிவுநீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் சுமார் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல், தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. குடியிருப்புவாசிகள் இது குறித்துப் பலமுறை பேரூராட்சித் தலைவர் சந்திரனிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்தால், சிலர் வந்து செல்போனை நோண்டிக்கொண்டே நின்றுவிட்டுச் சென்றுவிடுகின்றனர் எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கழிவுநீர் தேங்குவது ஒருபுறம் இருக்க, தோண்டப்பட்ட குழிகளால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், குழந்தைகள் தடுக்கி கீழே விழும் அபாயம் இருப்பதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்காலிகமாக மரப்பலகைகள் மற்றும் மூங்கில்களைக் கொண்டு பாதை அமைத்து வருகின்றனர். உடனடியாகப் பேரூராட்சி நிர்வாகம் இதற்குத் தீர்வு காணாவிட்டால், பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story




