சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

X
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள சுகாதார மற்றும் பொதுமக்கள் வசதிகள் தொடர்பாக பல்வேறு குறைகளை நேரில் பார்வையிட்டார். அய்வின்போது, கழிவறைகளில் கதவுகள் இல்லாததை கண்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, கதவுகளை அமைக்கும் பணியை தொடங்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதேபோன்று, பல நாட்களாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட லிப்ட் பற்றியும், விரைந்து சரிசெய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான உத்தரவிட்டார். தினசரி 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் இம்மருத்துவமனையில், கடந்த சில வாரங்களாகவே பல்வேறு குறைகள் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளையும் ஆய்வு செய்த ஆட்சியர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பானங்கள் மற்றும் பால்கள் போன்ற உணவுப் பொருட்கள் காலாவதியாகியுள்ளனவா, சுத்தமாக வைத்துள்ளனவா என்பதை ஆய்வு செய்தார். விற்பனையாளர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆய்வின்போது குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், "சிவகங்கை நகரத்தில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகளை அடிக்கடி கடிக்கின்றன" என்று புகார் தெரிவித்தார். இதையடுத்து நகராட்சி ஆணையரிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்ட ஆட்சியர், "அரை மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்" என கண்டிப்புடன் உத்தரவிட்டார். மேலும், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை சேர்ந்த சங்கரபாண்டி என்பவர், தனது மனைவியின் சிகிச்சைக்காக தினமும் மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ரத்த மாதிரிகள் எடுத்து ரத்த சோதனை செய்யும் நிலையத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி மீண்டும், மீண்டும் அழைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். இதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உறுதியளித்தார். மருத்துவமனை டீன் சத்தியபாமாவிடம், பொதுமக்கள் புகார்கள் குறித்து கேட்ட ஆட்சியர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்
Next Story

