மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற விரும்பும் சிறு, குறு நிறுவனங்கள் கடனுதவி திட்டத்திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

X
மத்திய அரசு அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3% வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பயன்பெறலாம். கடன் வசதி பெற தகுதியான இனங்கள்: இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும். கடன் வசதியை பெற தகுதியானவர்கள் மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும். அரசு அறிவித்துள்ள இந்த வேளாண் உட்கட்டமைப்புகளுக்கான கடன் வசதியின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல், சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்க இயலும். இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக்கிளைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

