ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வட்டாரம் தோறும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது

X
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ‘வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அறுவடை காலங்களில் அதிக வரத்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வரத்தினை ஒழுங்குபடுத்திடவும், வேளாண் விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்திட ஏதுவாகவும், ஒழுங்குமுறை விறபனைக்கூடத்தின் நீட்சியாக, வட்டாரம் தோறும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மற்றும் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 11 வட்டாரத்திற்கும் தலா ஒரு பொது சேகரிப்பு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு வேலாயுதபுரம், விருதுநகர் வட்டாரத்திற்கு மீசலூர், காரியாபட்டி வட்டாரத்திற்கு அயன் அல்லிகுளம், திருச்சுழி வட்டாரத்திற்கு முத்துராமலிங்கபுரம், நரிக்குடி வட்டாரத்திற்கு உலக்குடி, இராஜபாளையம் வட்டாரத்திற்கு சேத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டாரத்திற்கு அச்சம்தவிழ்த்தான், வத்திராயிருப்பு வட்டாரத்திற்கு குன்னூர், சிவகாசி வட்டாரத்திற்கு புதுக்கோட்டை, வெம்பக்கோட்டை வட்டாரத்திற்கு எம்.துரைச்சாமிபுரம், சாத்தூர் வட்டாரத்திற்கு பெரிய கொல்லப்பட்டி ஆகிய கிராமங்களில் பொது சேகரிப்பு மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொது சேகரிப்பு மையங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் நீட்சியாக கருதி, வேளாண் பெருமக்களையும் வியாபாரிகளையும் இணைத்து வணிகம் மேற்கொள்ளும் மையமாக கருதப்படுகிறது. பொது சேகரிப்பு மையங்களில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதால் கால விரயம் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது. மேலும் மற்ற மாவட்டங்களிலிருந்து வணிகர்கள் விற்பனையில் பங்குபெறுவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். பொது சேகரிப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விலை நிலவரங்களை கொண்டு விவசாயிகள் தங்களது விலைபொருட்களின் தரத்திற்கேற்ப விற்பனை விலையை அறிந்து கொள்ள முடிகிறது. வேளாண் விளைபொருட்களை பொது சேகரிப்பு மையம் மூலம் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அல்லது வட்டார அளவில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர்கள் (வேளாண் வணிகம்) ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

