பசுமை பரப்பின் அடையாளமான தேவரியம்பாக்கம் குறுங்காடு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் கிராம பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குறுங்காடுகள் உருவாக்க, 'சங்கல்ப்தாரு பவுண்டேஷன்' முன்வந்தது. இதற்காக அப்பகுதியில் உள்ள 15 ஏக்கர் பரப்பிலான தரிசு நிலத்தை ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது. அதையடுத்து, 2022ல் இலுப்பை, வேம்பு, மருதம், பாதாம், அத்தி, வில்வம், அரசமரம், புங்கன், மகிழம், வேங்கை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளும், மா, பலா, நாவல் போன்ற பழ வகை மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. இந்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்ச, தேவரியம்பாக்கத்தில் கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளத்தில் உள்ள தண்ணீர், சூரிய சக்தி மூலம் உறிஞ்சப்பட்டு சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்டது. இவ்வாறான நீர் மேலாண்மை பயன்பாட்டு மூலம், 12,000 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தற்போது அவை 15 அடி உயரத்திற்கு வளர்ந்து பசுமை காடாக காட்சி அளிக்கிறது. 'சங்கல்ப்தாரு பவுண்டேஷன்' மற்றும் தேவரியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், தொடர்ந்து மரக்கன்றுகளுக்கான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குறுங்காடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பேருதவியாக இருக்கும் என, இயற்கை ஆர்வலர் பலரும் இச்செயலைவரவேற்றுள்ளனர்.
Next Story

