சூலூர் விமானப்படை தளம் அருகே கரும்புத் தோட்டத் தீ விபத்து பெரும் பரபரப்பு

சூலூர் விமானப்படை தளம் அருகே கரும்புத் தோட்டத் தீ விபத்து பெரும் பரபரப்பு
X
சூலூர் விமானப்படைத் தளம் அருகே உள்ள பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட கரும்புத் தோட்டத் தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் விமானப்படைத் தளம் அருகே உள்ள பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட கரும்புத் தோட்டத் தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காடாம்பாடி பகுதியில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தவர்கள், கரும்பு அறுவடைக்குப் பிறகு எஞ்சிய கரும்புகளைத் தீயிட்டு நேற்று இரவில் எரித்துள்ளனர். இந்தத் தீ மளமளவெனப் பரவி, சூலூர் விமானப்படைத் தளத்தின் அருகே அதிக அளவில் தீப்பொறிகளையும், அடர்த்தியான புகையையும் ஏற்படுத்தியது. இதனால், விமானப்படைத் தளத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. சம்பவத்தைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக வட்டாட்சியர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்குக் காரணமான விவசாயிகளை காவல்துறையினர் எச்சரித்ததோடு, இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். திடீரென இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. விமானப்படைத் தளத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
Next Story