தென்காசியில் பொதுமக்கள் சாலை மறியல்

தென்காசியில் பொதுமக்கள் சாலை மறியல்
X
பொதுமக்கள் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் கடையம், மயிலப்பபுரம் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நையாண்டி மேளம் அடிப்பதற்காக தென்காசியில் இருந்து ஐயப்பன் என்பவரது தலைமையிலான ஆறு போ் கொண்ட குழுவினா் சென்றிருந்தனா். தென்காசி மங்கம்மாள்சாலை பகுதியைச் சோ்ந்த முருகேசன்(30) ,செங்கோட்டை சாமியாா் தெருவைச் சோ்ந்த மாயாண்டி ஆகிய இருவரும் அப்பகுதியிலுள்ள பழைய கல்வெட்டான்குழியில் கால் கழுவ இறங்கியபோது முருகேசன் கால் தடுமாறி உள்ளே விழுந்து உயிரிழந்தாா். சுரண்டை தீயணைப்பு வீரா்கள் அவருடைய உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் வனவேங்கை கட்சி நிறுவனா், தலைவா் ராஜபாளையத்தைச் சோ்ந்த இரணியன் தலைமையில் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு மதுரை சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கல்வெட்டான் குழியில் வேலி போடாத அந்த உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த முருகேசன் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், புளியங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சி நாதன் (பொ) தென்காசி காவல் ஆய்வாளா் ராபா்ட் ஜெயின் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
Next Story