பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் முதலிடம் பிடித்த பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

X
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து, பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பல்வேறு பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவிகள் எம்.ஹாசினி, டி.தாரணி, வி.கோகுல வர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு, அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டியதோடு, வழிகாட்டியாக செயல்பட்ட பட்டதாரி ஆசிரியர் லெ. சகுந்தலாவைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். இதனைத் தொடர்ந்து, தஞ்சையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார் . இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் இ.மாதவன், நேர்முக உதவியாளர் சஞ்சய், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ரா. சுந்தர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

