பேராவூரணி அருகே உலக அலையாத்திக்காடுகள் தினம் 

வனத்துறை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், வனத்துறை  சார்பில், உலக அலையாத்திக்காடுகள் தினம் விழிப்புணர்வு, அலையாத்தி கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், "அலையாத்தி மரங்கள் இயற்கை பேரழிவுகளில் இருந்து கடலோர கிராமங்களில் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கரையை நோக்கி வரும் அலைகளின் சீற்றத்தை கட்டுப்படுத்தி, கடற்கரை கிராமங்களையும் மீனவர்களின் படகுகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும், கடல்வாழ் உயிரினங்களான நண்டு, இறால், மீன்கள் ஆகியவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அவற்றின் பாதுகாப்பான வாழ்விடமாகவும், அலையாத்திக் காடுகள் திகழ்கின்றன. மேலும், கடல் அரிப்பை தடுக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. எனவே, அலையாத்தி மரங்களை நாம் பாதுகாக்க வேண்டும்" இவ்வாறு பேசினார். தொடர்ந்து வெளிவயல் கடல் பகுதியில் அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன.  நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர், இயக்குநர் டாக்டர் வி.பாலாஜி, மேலாளர் அன்பு, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவசுப்பிரமணியன், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் அன்வர் மீரான், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.அஜ்முதீன், தேசிய மாணவர் படை கே.எஸ்.சித்திரவேல், மாணவர்கள், கிராம மக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story