கோவை: ரோட்டரி கிளப் விழாவில் விஜய பிரபாகரன் உரை !
கோவை ரோட்டரி கிளப் தெற்கு 2025-26ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் 42வது தலைவராக பொன்ராஜ் பதவி ஏற்றார். இந்நிகழ்வில் தே.மு.தி.க இளைய தலைவர் விஜய் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். உரையின்போது, சிறுவயதிலிருந்து ரோட்டரி கிளப்பைப் பற்றி கேட்டு வந்துள்ளேன். இது தான் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்வு. இதில் ஒவ்வொன்றும் புதிதாக உள்ளது, எனப் பெருமிதத்துடன் கூறினார். தொடர்ந்து, ஆகஸ்ட் முதல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது. குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல; கட்சிக்காரர்கள் கட்சி நிகழ்ச்சிக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று அப்பா கூறுவார். தேதி கொடுத்தால் கண்டிப்பாக வரவேண்டும். துளசி வாசம் மாறும், தவசி வாக்கு மாறாது என விஜயகாந்த் வசனத்தையும் மேற்கோள் காட்டினார், என்றார். அப்பா நம்மை விட்டு போகவில்லை. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். அவர் தொடங்கிய செயல்களை நாங்கள் – அவரது மகன்கள் – தொடர்கிறோம். தே.மு.தி.க ஒரு கிளப் அல்ல, அது ஒரு கட்சி. ரோட்டரி கிளப் உங்கள் கனவாக இருந்தால், தே.மு.தி.க என் அப்பாவின் கனவு. அவர் செய்யும் பணிகளைத் தொடர்ந்துதான் நான் இருக்கிறேன். அந்த தேரை இழுக்க தயார் என உறுதிமொழி அளித்தார். அவர் மேலும், முடியாது என்பது முட்டாளுக்கே சொந்தமானது, முடியும் என்பது அறிவாளிக்கே சொந்தமானது என விஜயகாந்த் கூறிய வசனத்தை நினைவுபடுத்தினார். பின்பு ஊடகங்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 3 முதல் 28ஆம் தேதி வரை உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் தலைப்பில் மாநிலமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பிரச்சாரம், மக்களிடம் நம்பிக்கையை மீண்டும் விதைக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் ஒரு முக்கிய முயற்சி. இதற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் செயற்பட உள்ளோம் என்றார். தே.மு.தி.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் இருக்கிறோமா? என கேள்வியோடு பதிலளித்த அவர், நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்கு, பிரதமர் எங்களிடம் வந்து பேசலாம் அல்லவா? பிரதமரை சந்திக்க வேண்டிய நேரம் வந்தால் சந்திப்போம் என்றார். கமலஹாசன் எம்.பி ஆனதை வரவேற்கிறோம். சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர், தற்போது தி.மு.க வாயிலாக மக்களுக்காக பேச வாய்ப்பு பெற்றுள்ளார். அவர் மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பாராட்டு தெரிவித்தார்.
Next Story



