காவிரி வெள்ளத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட தி.மு.க. செயலர்

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலர் உணவு வழங்கினார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டியுள்ளது இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ள ஒரு லட்சம் கன அடி நீரானது 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது இதனை அடுத்து காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவாய்த் துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி நேரில் வந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளான கலைமகள் வீதி அண்ணா நகர் இந்திரா நகர் மற்றும் மணிமேகலை தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். எங்களுக்கு வீடுகள் கட்டி கொடுங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டதற்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக மூர்த்தி கூறினார். மேலும் வெள்ள பாதிப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இந்த ஆய்வின் போது குமாரபாளையம் நகராட்சி தலைவரும், வடக்கு நகர பொறுப்பாளருமான விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், முன்னாள் நகர செயலர் செல்வம், பேச்சாளர் அன்பழகன், கவுன்சிலர் அழகேசன், கனகலட்சுமி, விஜயா, சியாமளா, நிர்வாகிகள் ராஜ்குமார், தாசில்தார் சிவகுமார், உள்ளிட்ட வருவாய் துறையினரும் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
Next Story