வேளாண்மை துறையின் சார்பில், ஓலைப்பாடி கிராமத்தில் கோடை உழவு செய்யும் பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X
வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசினால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் திட்டம் ஆகும் எனவும், இத்திட்டத்தை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விவசாயிகள் சார்பாக நிறைந்த மனதுடன் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
வேளாண்மை துறையின் சார்பில், ஓலைப்பாடி கிராமத்தில் கோடை உழவு செய்யும் பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரம் ஓலைப்பாடி கிராமத்தில், வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் கோடை உழவு மற்றும் விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண் பதிவு செய்யும் பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் திரு.செ.பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோடை உழவு மானியமாக ரூ.800 ஏக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது இப்பணிகள் தொடர்பாக ஓலைப்பாடி கிராமத்தில் ஆய்வு செய்யப்பட்டது.. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.96 லட்சம் இலக்கீடாக வழங்கப்பட்டு தற்பொழுது பின்னேற்பு மானியம் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்டத்திற்கு 12,000 ஏக்கர் இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9,500 ஏக்கர் கோடை உழவு மானியம் வழங்கப்பட்டு 7,295 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், கோடை உழவு செய்யும்போது, மண்ணிலிருந்து வெளிவரும் சிறு பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தித் தின்று அவைகளை அழித்து விடுவதால், அடுத்து சாகுபடி செய்யும் பயிரில், பூச்சி நோய் தாக்குதல் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகின்றது. மறு உழவு செய்யும்போது, களை செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வளராமல் தடுப்பதால், செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது. மேலும் ஓலைப்பாடி கிராமத்தில் வேளாண் அடுக்ககத்தின் கீழ் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியானது வேளாண்மை துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதுவரை இதில் இணையாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 96,400 விவசாயிகளில் இதுவரை 69,356 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,044 விவசாயிகள் அடையாள எண் பெற விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். கோடை உழவு மானியம் பெற்ற விவசாயி வேலுச்சாமி என்பவர் கூறியதாவது: நான் வருடந்தோறும் வேளாண்மைத் துறை அலுவலர்களின் ஆலோசனையின்படி கோடை உழவு செய்து வருகிறேன். கோடை உழவு செய்யும் பணியினை ஊக்கப்படுத்தும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.800 மானியத்தில் வழங்குவதாக என்னிடம் வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். நானும் என்னுடைய 2 ஏக்கர் நிலத்திற்கு கோடை உழவு மானியம் வேண்டி விண்ணப்பித்தேன். என்னை பயனாளியாக தேர்வு செய்த வேளாண்மைத் துறை அலுவலர்கள் பின்னேற்பு மானியமாக ரூ.1,600 என்னுடைய வங்கி கணக்கிற்கு மின்னணு பரிவர்த்தனை மூலமாக அனுப்பியுள்ளனர். இது என்னைப் போன்ற சிறு,குறு விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசினால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் திட்டம் ஆகும் எனவும், இத்திட்டத்தை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விவசாயிகள் சார்பாக நிறைந்த மனதுடன் நன்றி கூறுவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

