சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

X
சேலம் அருகே வீராணம் பக்கமுள்ள கோமாளிவட்டம் பகுதியை சேர்ந்தவர் பூமாலை. விவசாயியான இவர் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி சின்னபாப்பா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 27-ந் தேதி இரவு பூமாலை வீட்டின் வெளிப்பகுதியிலும், சின்னபாப்பா வீட்டிற்குள்ளும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அவருடைய வீட்டுக்கு முகமூடி அணிந்து கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. பின்னர் அவர்கள் பூமாலை மற்றும் சின்னபாப்பா ஆகியோரை கட்டிப்போட்டுவிட்டு 8¼ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது காரில் வந்தவருடன் சேர்த்து 5 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக கொள்ளை சம்பவம் நடந்த கோமாளி வட்டம் பகுதியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதாவது சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வழியாக சென்ற கார்களின் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய போலீஸ் உதவி கமிஷனர் தேன்மொழிவேல் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்கீதா, விஜயேந்திரன், மோகனா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்முத்துராமன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கொள்ளையர்களை பிடிக்க தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

