நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி, வளர் பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு யாகம் !

நாமக்கல் வாராஹி  அம்மன் கோவிலில் கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி, வளர் பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு யாகம் !
X
கருடபஞ்சமியை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் மாலையில் திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து இரவு 10 மணியளவில் அஷ்ட வாராஹி யாகமும் நள்ளிரவு இரண்டு மணி வரை நடைப்பெற்றது.
தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமையும் பெண்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து பக்தா்களுக்கு கூழ் வழங்கி வழிபாடு செய்வார்கள்.நாமக்கல்- சேந்தமங்கலம் ரோடு, ரயில் நிலையம் அருகில் உள்ள, எம்.ஜி.ஆர். நகரில் ஸ்ரீ தங்காயி மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் திருக்கோயில் உள்ளது.திருமாலின் வராக அம்சமாக கருதப்படும் வாராஹி அம்மன் சப்த கன்னியரில் ஒருவராகவும் திகழ்கிறார். பஞ்சமி நாட்கள் வாராஹி அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.இந்த கோயிலில் கடந்த 11 ஆண்டுகளாக ஆடி மாதம் கருட பஞ்சமி, நாக பஞ்சமி மற்றும் வளர் பிறை பஞ்சமி திதி வெகு விமரிசையாக நடைபெறும்,
அந்த வகையில், கடந்த (24.07.2025) வியாழக்கிழமை காலை 6 மணியளவில் கணபதி பூஜை மற்றும் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது, தொடர்ந்து வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், நவாவரணம் , சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது... திங்கட்கிழமை (ஜூலை 28 ) நாக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன,ஆவணி மாத வளர்பிறையில் (ஜூலை 29) ஆடி செவ்வாய்க்கிழமை கருடபஞ்சமியை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் மாலையில் திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து இரவு 10 மணியளவில் அஷ்ட வாராஹி யாகமும் நள்ளிரவு இரண்டு மணி வரை நடைப்பெற்றது.
பூஜையையொட்டி கலசங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வாராஹி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள உலக நன்மை வேண்டி யாக பூஜைகள் செய்யப்பட்டது.இந்த யாகத்தின் மூலம் முன்னோர்கள் சாபம், பில்லி, சூனியம் ஆகியவற்றில் இருந்து விடுபடவும், குடும்ப சுபிட்ஷம், பதவி உயர்வு, செய்யும் தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும் என்பது ஐதீகம். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயில் வளாகத்தில் தேங்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சித்தர் பீட பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் முத்தானந்தா சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
Next Story