காவிரியில் கரை புரண்டு வெள்ளம் ஓடியும் பஞ்சப்பட்டி ஏரியின் பஞ்சம் தீரவில்லை.

காவிரியில் கரை புரண்டு வெள்ளம் ஓடியும் பஞ்சப்பட்டி ஏரியின் பஞ்சம் தீரவில்லை.
காவிரியில் கரை புரண்டு வெள்ளம் ஓடியும் பஞ்சப்பட்டி ஏரியின் பஞ்சம் தீரவில்லை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது பஞ்சப்பட்டி ஏரி. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1837 ஆம் ஆண்டில், 1170 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கபட்டது. இந்த ஏரியானது கடவூர் மலைப்பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ள நீரை சேமித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. பஞ்சப்பட்டி ஏரி, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரியாக கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்கும் வசதி உள்ளது. இந்த அணை கட்டுவதற்காக ஏறக்குறைய சுமார் 275 கோடி செலவிடப்பட்டது. இங்கிருந்து பஞ்சப்பட்டி ஏரி 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதே சமயம் மாயனூர் பகுதி காவிரி ஆற்றில் இருந்து பலநூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் நாள்தோறும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ள காலத்தில் உபரியாக கடலுக்கு செல்லும் நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் பல வருடங்களாக போராட்டமும் கோரிக்கையும் அரசுக்கு வைத்து வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள முக்கியமான பத்து பிரச்சனைகள் குறித்து அரசுக்கு கருத்துரு கொடுக்க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உத்தரவிட்டது. முக்கிய நீராதார பிரச்சனையாக இருக்கும் இந்த பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென குளித்தலை எம்எல்ஏ அரசுக்கு கருத்துரு அனுப்பினார். ஆயினும் வருடங்கள் பல உருண்டோடியும் காவிரி ஆற்றில் பலமுறை வெள்ளம் வந்தும் இதுவரை பஞ்சபட்டி ஏரிக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனால் பஞ்சப்பட்டி ஏரியின் பஞ்சம் தீராமல் உள்ளது. எனவே, ஏரிக்கு நீர் ஆதாரத்தை பெருக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story