பேராவூரணி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கி எம்எல்ஏ பாராட்டு

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவிகள், எம்.ஹாசினி, டி.தாரணி, வி.கோகுலவர்ஷினி ஆகியோர் கொண்ட குழுவினர், தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வித்துறை இணைந்து, பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் 1 லட்சம் பரிசு பெற்றனர். இந்நிலையில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மாணவிகளைப் பாராட்டி, சால்வை அணிவித்து ரொக்கப் பரிசு வழங்கினார். மேலும், வழிகாட்டியாக செயல்பட்ட பட்டதாரி ஆசிரியர் சகுந்தலாவையும் பாராட்டி சால்வை அணிவித்து ரொக்கப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மேனகா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி, இருபால் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

