சேத்துப்பட்டு அருகே போலி மருத்துவரால் சிகிச்சை அளித்து விவசாயி இறப்பு. போலி டாக்டர் கைது.

சேத்துப்பட்டு அருகே போலி மருத்துவரால் சிகிச்சை அளித்து விவசாயி இறப்பு. போலி டாக்டர் கைது.
X
சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி இறந்த வழக்கில் போலி டாக்டரை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆரணி, சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி இறந்த வழக்கில் போலி டாக்டரை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (57) என்பவர் விவசாயி ஆவார். இந்நிலையில் கணேசனுக்கு சில மாதங்களாக இடுப்பு வலி மற்றும் கால் வலி இருந்து வந்தது. அப்போது அவரிடம் அதே ஊரை சேர்ந்த சிலர் சேத்துப்பட்டு வட்டம், இராந்தம் கிராமத்தில் கிளினிக் நடத்தும் மருத்துவரிடம் சென்றால் இடுப்பு வலி, மூட்டு வலி ஆகியவை குணமடைவதாகவும், மேலும் அவர்களும் அங்கு சென்று வந்த பின் குணமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கணேசன் தனது உறவினரான சக்திவேலுடன் புதன்கிழமை விண்ணமங்கலம் செய்யாற்று பாலம் அருகே தைலம் தோப்பில் உள்ள மகேஷ் (எ) மகேந்திரன்(45) என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றனர். அங்கு கணேசனுக்கு குளுக்கோஸ் ஏற்றும் போது மஞ்சள் நிறத்தில் உள்ள மருந்தை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது கையில் அலர்ஜி பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயக்கம் அடைந்தார். உடன் சென்ற உறவினர் சக்திவேல் என்பவர் மயக்கமடைந்த கணேசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற சேத்துப்பட்டு போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணேசனின் மனைவி மலர் கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டாக்டரை தேடி வந்தனர். இந்நிலையில் டாக்டர் ஆரணியில் உள்ளதாக தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று போலி டாக்டர் மகேஷ் என்கிற மகேந்திரனை காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில் அவர் ஆரணியை சேர்ந்த மகேஷ் (எ) மகேந்திரன் என்பதும், இவர் டிப்ளமோ லேப் டெக்னீசியன் படித்து விட்டு கடந்த 18 ஆண்டுகளாக தெள்ளூர் கிராமத்தில் கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story