ஓடியே வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்

ஓடியே வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்
X
ஓய்வு பெற்ற நாளில் ருசிகரம்
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள பூவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது60). இவர் 41 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக கோட்டார் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வழக்கமாக ஒருவர் ஓய்வு பெறும்போது அவருக்கு சக ஊழியர்களும், அதிகாரிகளும் பிரிவு உபசார விழா நடத்தி தங்களது துறை வாகனத்தில் கவுரவமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். அதன்படி பாலகிருஷ்ணனுக்கு நேற்று கோட்டார் போலீஸ் நிலையத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. விழா முடிந்தவுடன் பாலகிருஷ்ணன் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோட்டாரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு ஓடியே சென்றார். ஓய்வு பெறும் நாளில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் ஓடியே வீட்டுக்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story