தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் ஆய்வு

X
திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டி கிராமத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தேவாங்குகளை பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், அவை விவசாயத்தில் வகிக்கும் முக்கியப் பங்கினை எடுத்துரைக்கும் விதமாக, திண்டுக்கல் வனக்கோட்டம், அய்யலூர் வனச்சரகம், சுக்காம்பட்டி கிராமத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம் சுமார் 8.11 எக்டேர் பரப்பளவில் அமைத்திட ரூ.16.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேவாங்கு பாதுகாப்பு மையத்தில், நுழைவு வளைவு, கலந்துரையாடும் மையம், பொழுதுபோக்கு மையம், பாதுகாப்பு மையம் மற்றும் இரவு ஸ்டுடியோ, கடைகள், கழிப்பறை வசதி, விருந்தினர் அறை, பார்வையாளர் மையம், சுற்றுச்சுவர் கட்டுதல், சாலைகள் அமைத்தல், சாகச மண்டலம் (Adventure Zone), குடிநீர் வசதி, உயர்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல், சுற்றிலும் வேலி அமைத்தல், உள்அலங்காரம் செய்தல், சிறுவர்கள் விளையாடும் அரங்கம், புல்வெளிகள் அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், ஆங்காங்கே விளக்க பெயர் பலகைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் இடத்திற்கு சென்று வர உரிய தார்ச்சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் ஓடை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர் காஞ்சனா, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story

