பாவை கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிகள்.
NAMAKKAL KING 24X7 B |1 Aug 2025 6:26 PM ISTபாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சிகள்‚
பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சிகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். இளங்கலை மூன்றாமாண்டு கணினி அறிவியல் மாணவி செல்வி.ஜெ.சஹானா வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினைச் சிறப்பித்து, வாழ்த்துரை வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், ‘பள்ளிக் கல்வியிலிருந்து, கல்லூரிக் கல்விக்கு அடியெடுத்து வைத்திருக்கும் மாணவிகளாகிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். கல்லூரி சூழலுக்கு ஏற்ப உங்களை தகவமைத்துக் கொள்ள, ஒரு முன்னோட்டமாக இப்பயிற்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது. பெண்மை போற்றுதும் என்பதிற்கேற்ப, போற்றுதலுக்குரிய இளம் மாணவிகளாகிய நீங்கள், மற்றவர்களுக்கு முன்னோடியாக, உத்வேகமாகத் திகழ வேண்டும். அதற்கு நீங்கள் வீரம், விவேகம், பகுத்தறிவு, பக்தி, அன்பு போன்ற ஈடு, இணையற்ற குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதனோடு உன்னதமான, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நல்ல ஆரோக்கியமான, அறிவார்ந்த, தெய்வீகமான எண்ணங்களையே நினைக்க வேண்டும். ஏனென்றால் சிறந்த எண்ணங்களே, உங்கள் வாழ்வினை வளப்படுத்துகின்றன. மூன்றாவது தைரியம் மற்றும் தன்னம்பிக்கையோடு, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மாணவிகளாகிய நீங்கள் வாழ்வில் எப்பொழுதும் நல்ல பழக்க, வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி வாய்ப்புகள் கிடைக்கும் போது, தயக்கமின்றி நற்செயல்களை முன்னெடுத்துச் செயல்படுங்கள். மேலும் மாணவிகளே, தோல்விகள் நேரிடும் போது, சோர்ந்து போகாமல், மீள் தன்மை கொண்டவர்களாக இருங்கள். கடைசியாக மற்றவர்களிடம் நல் அணுகுமுறை கொண்டவர்களாகத் திகழுங்கள். இவைகளோடு மற்றவர்களை முகமலர்ந்து வாழ்த்துபவர்களாகவும், பாராட்டுபவர்களாகவும், நன்றியறிதல் உள்ளவர்களாகவும் நீங்கள் திகழ வேண்டும். மேற்சொன்னவைகளை நீங்கள் கடைபிடிக்கும் போது, உங்களின் தனித்துவமான, உள்ளார்ந்த திறன்கள் மேம்பட்டு, உங்களால் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று பேசினார்.தொடர்ந்து முதுகலை இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி செல்வி.எஸ்.இன்பஸ்ரீ புத்தாக்கப் பயிற்சியின் முன்னுரை வழங்கினார். இப்புத்தாக்கப் பயிற்சியில் பாவையின் கலாச்சாரம், நேர மேலாண்மை, தொழில் முன்னேற்றப் பாதை, புதிய சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், தொடர்பு திறன்கள், கணிதம், யோகா, தேர்வுகளை அணுகும் முறை, இலக்கு நிர்ணயித்தல் போன்ற பல தலைப்புகளின் அடிப்படையில் மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.இவ்விழாவில் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.எம்.ரேவதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story


