பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
X
கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.
வசந்தி தேவி 1938-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். இவர் தொழிற்சங்கவாதியும், சிந்தனையாளருமான சக்கரைச் செட்டியாரின் மகள் வழி பேத்தி. இவருடைய தந்தை பி.வி.தாஸ் வழக்கறிஞராகவும், திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையான வசந்தி தேவி, 1987-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 முதல் 1990 வரை இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். 1992 முதல் 1998 வரையில் இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். பின்னர் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் இவர் தமிழ்நாட்டின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். வசந்தி தேவி 2016-ஆம் ஆண்டு ஆர்.கே.நகரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பல்வேறு கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு காரணமாக இருந்தவர் வசந்தி தேவி. தமிழகத்தில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளார் இவர்.
Next Story