அயோத்தியாபட்டணம் அருகே லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலி

X
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே சின்னமநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிமோகன் (வயது 27). இவர், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் குள்ளம்பட்டி பகுதியில் இருந்து பேளூர் நோக்கி சென்றார். பி.நாட்டாமங்கலம் அருகே ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள வே பிரிட்ஜில் ஜவ்வரிசி பாரத்தை எடை போட்டுக்கொண்டு, திடீரென லாரி பின்னால் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரியின் பின்பகுதி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சசிமோகன் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story

