நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

X
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரலையில் பார்வையிட்டு முகாமில் உடல் மற்றும் இரத்த பரிசோதனை மேற்கொண்ட நபர்களுக்கு மருத்துவ ஆய்வறிக்கையினை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இன்று (02.08.2025) காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் குன்னம் வட்டத்திற்குட்பட்ட துங்கபுரம் அரசு மேல்நிலை பள்ளியிலிருந்து நேரலையில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளையும், முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த 20 நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் 2025-26ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையில், தமிழகம் முழுவதும் 1,256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு வட்டத்திற்கு 3 முகாம்கள் வீதம் 4 வட்டத்திற்கும் 12 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் 02.08.2025 முதல் 06.12.2025 வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் தான் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அளவீட்டுடன் உதவி உபகரணங்கள் செய்து தரும் அலிம்கோ நிறுவனம், பெங்களூரிலிந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, இம்முகாமிற்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப செயற்கை கை, செயற்கைக் கால் போன்ற உதவி உபகரணங்கள் வழங்க அளவெடுக்கப்பட்டுஅவற்றை உடனடியாக செய்து கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக முகாம் நடைபெறும் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முகாமிலேயே நேரடியாக மாற்றுத்திறனாளி உபகரணங்கள் அளவீட்டு செய்து கிடைப்பதற்கான வழிவகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளை பெற்று, ஒவ்வொருவரும் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.விவேகானந்தன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

